தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரத்தை மாற்றி மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதற்கட்டமாக மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பென்ஷன், ஜன்தன் கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளில் மத்திய மாநில அரசுகள் செலுத்தும் நிவாரணத் தொகையை எடுப்பதற்கும் பலர் ஒரே சமயத்தில் கூடியதாலும், வங்கி நேரம் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் வங்கி செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து (ஏப்ரல் 15) வங்கிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஏப்ரல் 15 முதல் மே 3ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி முடிந்துவிட்டது. பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மதியம் 1 மணிக்குள்ளாகப் பொதுமக்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டதன் காரணமாக வங்கிகளில் கூட்டம் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.