டாஸ்மாக்கை திறக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் எப்போது மதுக்கடைகள் திறக்கப்படும் என மதுப் பிரியர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்து வருகின்றனர். டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராய விற்பனையும் பெருக ஆரம்பித்துவிட்டது. கடலூரில் போதைக்காக மெத்தனாலை நீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த வசந்த் மனுதாக்கல் செய்தார். அதில் , “டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது. 22 இடங்களில் மதுக்கடைகள் உடைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது” என்று குறிப்பிட்டார். மேலும், “மதுவுக்கு அடிமையான சிலர் மெத்தனால், வார்னீஷ் உள்ளிட்டவற்றை குடித்ததால் உயிரிழந்துவிட்டனர். திடீரென மது அருந்துவதை நிறுத்தும் போது, இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், மூளையை பாதிக்கச் செய்கிறது. மதுப்பிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது டாஸ்மாக்கை திறக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன்பு (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆகவே, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது” என வாதிட்டார். அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.