சரவணா ஸ்டோர் சரவணன் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று முயற்சித்தார். அதன் ஒரு முன்னோட்டமாகவே பிரபல நடிகைகளுடன் இணைந்து தனது ஜவுளிக்கடை விளம்பரத்திற்கு நடித்து வந்தார். சினிமாவுக்கு நிகராக அந்த விளம்பரப் படங்கள் பிரம்மாண்டமான தரத்தில் இருந்தன. சமூக வலைதளங்களில் இதுபற்றி கேலியும் கிண்டலும் அதிகம் இருந்தது. அதனால் அந்த விளம்பரங்களை பார்ப்பவரின் எண்ணிக்கை அதிகரித்தது. அடுத்து எந்த மாதிரியான விளம்பரத்தில், எந்த நடிகையுடன் நடிக்கப்போகிறார் என்று சினிமா நடிகர்களுக்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்கினார் சரவணன். அந்த எதிர்பார்ப்பு தனது சினிமா எண்ட்ரிக்கு சரியான சமயம் என உணர்ந்தவர் தனக்கான ஜோடியைத் தேடினார். நயன்தாரா, தமன்னா ஆகியோரை இவருடன் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இவருடன் நடிப்பதற்கு எந்த முன்னணி கதாநாயகியும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின்

தொடக்க விழா முன்னறிவிப்புகள் எதுவுமின்றி இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி – ஜெர்ரி ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். எளிமையான இந்த பூஜையில் பிரபல இயக்குனர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார். சரவணனுடன் நடிக்கப்போகும் ஹீரோயின் யார்? என்று உலவிவந்த கேள்வி, இப்போது சரவணனுடன் நடிக்கும் இந்த நடிகை யார்? என்பதாக மாறிவிட்டது. சினிமாவில் இதுவரை அறிமுகமில்லாத ஈத்திகா திவாரி எனும் வடஇந்திய நடிகை ஒருவரை சரவணனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர்.