கல்லெறிபவர்கள்தான் அதிமுககாரர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த சுந்தரபாண்டியபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மதக்கலவரத்தை தூண்டி விடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை கேட்க உரிமை இருக்கிறது உண்மை. ஆனால் கலவரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் மதக்கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் என்றும், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என முதல்வர் கேட்டதற்கு பதில் கூறாமல் சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்ததாகவும், உண்மை இருந்தால் அங்கேயே பதில் சொல்லியிருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

மேலும், “அதிமுகவினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல, எம்ஜிஆர் கையை பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம். விசில் அடிப்பான், சவுண்ட் விடுவான், தேவைப்பட்டால் கல்லைக் கூட எறிவான். அவன்தான் அதிமுககாரன். சவுண்ட் கொடுக்கவில்லை என்றால் அவன் அதிமுககாரனே கிடையாது. அமைதியாக இருக்க நாங்கள் என்ன காங்கிரஸ்காரர்களா” என்று சொல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் பலமாக சிரித்தனர். ஏற்கனவே ராஜேந்திர பாலாஜியின் பல பேச்சுக்கள் சர்ச்சையாகிய நிலையில், தற்போது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.