ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலமிடப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (டிசம்பர் 11) ஊர்க் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில், அதிமுக பிரமுகர் ராமசுப்புவை ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு, அதே ஊரைச் சேர்ந்த சதிஷ்குமார் (வயது 27) என்ற இளைஞர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆளுங்கட்சியான அதிமுக பிரமுகர் ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்வோம், அதனால் ஊருக்கும், கோவிலுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு தரப்பினர் வாதம் செய்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து தட்டிக் கேட்டதால் சதிஷ்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதிஷ்குமார், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அதிமுகவைச் சேர்ந்த ராமசுப்பு மற்றும் சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்துள்ளனர். இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகோட்டை ஊராட்சியில் பொதுமக்கள் ஒன்று கூடி ஊராட்சி மன்ற தலைவருக்கான ஏலம் குறித்து பேசினர். அந்த கூட்டத்தில் தொண்டைமான் தெருவைச் சேர்ந்த ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்க தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதற்காக 32 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பணமாக 2 லட்சம் கட்ட வேண்டும் என்றும் மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், அப்படி பணம் கட்டத் தவறினால் மற்றொரு நபர் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுப்படுவார் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.