கொரோனா நெருக்கடி நிலையில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்கள், மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர். ஆனால், கொரோனா பரவலைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் நேரடியாக நிவாரணம் வழங்க அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனிடையே கொரோனா தொடர்பாக திமுக நடத்த இருந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக (ஏப்ரல் 15) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனாவின் நெருக்கடி மிகுந்த நிலையிலே கூட அதிமுக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேரிடரை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அரசியல் செய்து வருவது கண்டு, நடுநிலையாளர்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்” என்று விமர்சித்துள்ளார். “ஊரடங்கு உத்தரவு, ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு மட்டுமே விதிவிலக்கு, மற்றவர்களுக்கு எல்லாம் கட்டாயம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு முதல்வர் மிகுந்த பாரபட்ச அணுகுமுறையுடன் செயல்படுவது, ஜனநாயகத்திற்கே கேடாய் அமைந்திருக்கிறது. பொதுமக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்ற அடிப்படை ஒற்றுமை எண்ணமே இல்லாத இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்”என்று குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின்,

அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர வைத்து, 11.4.2020 அன்று அமைச்சரவைக் கூட்டத்தையே முதலமைச்சர் நடத்தியிருப்பதாகவும், ஆனால், திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறக் கூடாது சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து அப்பட்டமான, அசிங்கமான, அநாகரிகமான அரசியலைச் செய்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி ஆணவத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், பக்குவம் பெறாத அரசியலுக்கும் தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருள் வழங்குவது பற்றி குறிப்பிட்டவர், “அடக்குமுறைகளையும் – ஆணவங்களையும் எதிர்கொண்டு -நேருக்கு நேர் சந்தித்து அவற்றை புறமுதுகிட்டு ஓடவிட்டு, வெற்றி கண்ட இயக்கம் திமுக. ஆகவே,நிர்வாகிகள் அனைவரும் கொரோனா நோயின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, இதுவரை செய்ததைப் போலவே தொடர்ந்து ஆங்காங்கே செய்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.