எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை கைவிட வேண்டுமென எல்.ஐ.சி ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கையில், “1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் நேரு எடுத்துக் கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த போது உள்கட்டமைப்பு வசதிகளோ, கனரக தொழில்களோ தொடங்க நிதி பற்றாக்குறை இருந்தது. எல்.ஐ.சி நிதியுதவியைக் கொண்டு பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை இந்தியாவின் கோயில்கள் என்று பிரதமர் நேரு மகிழ்ச்சி பொங்க கூறியதை எவரும் மறந்திட இயலாது. ஆயுள் காப்பீடு என்பது நீண்டகாலத்திற்கானது என்பதால் மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும். அந்த வகையில் ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., 2018-19 ஆம் ஆண்டு அரசுக்குரிய 5 சதவீத லாப பங்காக ரூபாய் 2610 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு இதுவரை ஏறக்குறைய 35 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனம் நிதி திரட்டி வழங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படி மிக உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு சமமாகும் என்று கூறியுள்ள அழகிரி, “ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு முதலீடாக எல்.ஐ.சி. வழங்கி வருகிறது. இந்தியாவின் காமதேனுவாக கருதப்படுகிற எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து அதன் பாலிசிதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் இருந்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார். 134 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.ஐ.சி. நிறுவனத்தின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சிதைத்து தனியாருக்கு தாரை வார்ப்பதை இந்திய குடிமக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், “2000 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின் 20 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கடுமையான போட்டியை உருவாக்கியும், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் சராசரியாக 1 சதவிகித சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதை பார்க்கிற போது இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்கி வருகிறது. 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டதை விட ரூபாய் 1.7 லட்சம் கோடி குறைவாகவே உண்மையான வருவாய் வந்துள்ளது. இதனால் தான் இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலனாக, உற்ற தோழனாக செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.