தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மூன்றாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையின் காரணமாக மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு நான்கு தாலுகா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் குன்னூர், கோத்தகிரி, கேத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகில் மண்சரிவில் சிக்கித்தவித்த 6 பேரை உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 56 வயது ஜூலியட் நேற்று காலை குன்னூரிலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வரமுடியாமல் புதையுண்டார். இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மீட்புப் படையினர் ஒருமணி நேரம் போராடி ஜூலியட்டை உயிருடன் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் குன்னூர் டென்ட் ஹில் பகுதியில் ரேவதி என்பவர் இன்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார், எதிர்பாராதவிதமாக வீட்டின் பின்புறம் பெரிய அளவு மண்சரிவு ஏற்பட்டு சமையல் அறையின் கூரையில் விழுந்தது இதில் நான்கு குழந்தைகளுடன் ரேவதியும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புத் துறையினர் பல மணி நேரம் போராடி 4 குழந்தைகள் உட்பட 5 பேரை உயிருடன் மீட்டனர். மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஒருபுறம் ஏற்பட்டு வரும் நிலையில் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மண்சரிவில் சிக்கிக்கொண்ட 6 பேரை உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.