சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று அதிகாலை அண்ணாநகர், ராயப்பேட்டை, பெசன்ட் நகர், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. திருச்சியில் அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியதால் பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், தென்னம்புலம், திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டு, திருவள்ளூர், கரூர், கடலூர் , விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.