அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப் படுத்த வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மருத்துவர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனச் சொல்லப்படும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், பணி மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு வந்தன.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகச் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உரிமையில்லை” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ நோட்டீஸ் மற்றும் பணியிட மாறுதல் உத்தரவுகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மருத்துவர்களும், அரசும் கலந்தாலோசித்துத் தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.