பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீஸ் புதிய முயற்சியைக் கையிலெடுத்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவில் வெளியே சென்று வரும் பெண்களுக்கு கேப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல்துறை. லூதியானா காவல்துறை தரப்பில், ”மாலை அல்லது இரவில் ஆட்டோ, டாக்சி கிடைக்காத பட்சத்தில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இந்த வசதியைப் பெறலாம். அல்லது 7837018555 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால் போலீஸ் வாகனமே நேரடியாக வந்து பெண்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லூதியானா காவல் ஆணையர் கூறுகையில், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தெரிவிக்கச் சக்தி ஆப் என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். லூதியானா காவல்துறையின் இந்த நடவடிக்கை பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு சேவையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பெண்களிடையே எழுந்துள்ளது.