பிகில் திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து ஃபுட்பால் ஆட்டத்தை திரைப்படத்தின் முக்கிய பாய்ண்டாக கொண்ட படங்களை பார்க்கப்போகிறார்கள் என்பது மட்டும் உண்மை. பிகில் திரைப்படத்துக்குப் பிறகு, ஃபுட்பால் ஆட்டத்தை மையமாக வைத்து வெளியாகும் படம் ஜடா. இதையடுத்து வெளிவரவிருப்பது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாம்பியன். நரேன், மனோஜ், மிராளினி ரவி, விஸ்வா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

தொடர்ந்து விளையாட்டு தொடர்பான திரைப்படங்களை எடுத்துவரும் சுசீந்திரன் இம்முறை கையிலெடுத்திருப்பது ஃபுட்பால். விளையாட்டு, காதல் என்ற இரண்டு கோல் போஸ்டுகள் எப்போதுமே சுசீந்திரனின் மைதானத்தில் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றில் கோல் போடுவது சுசீந்திரனின் வழக்கம். ஆனால், திரைப்படத்தின் கடைசி வரை அந்த இரண்டில் எதை அவர் தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பதை ரசிகர்களால் கணிக்கமுடியாது. அதுபோல, இந்தப்படத்தில் விளையாட்டு, ரவுடிசம், காதல், அம்மா-அப்பா செண்டிமெண்ட் என நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார் என்பது டிரெய்லரிலிருந்து தெரிகிறது.