பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில், கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து 2006 முதல் சென்னை ஐஐடியில் மட்டும் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் 2006 முதல் ஐஐடியில் நிகழ்ந்த 14 தற்கொலை வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக் தந்திரிக் ஜனதா தள கட்சியின் இளைஞரணி தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டைச் சேர்ந்த சலீம் மடவூர் தாக்கல் செய்த மனுவில், பாத்திமா மரணம் குறித்து தமிழக, கேரள காவல்துறையிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளதைக் குறிப்பிட்டார். மேலும், ஆந்திரா(5), தெலங்கானா(3), கேரளா (3) ஆகிய மாநிலங்களை சேர்ந்த 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், குறிப்பாகச் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், ஆங்கில புலமை பெற்றவர்களாலும் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு (டிசம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான் இதுபோன்ற கொடுமைகளை அதிகமாக சந்தித்து வருகிறார்கள். இந்த மரணங்கள் சம்பந்தப்பட்ட உண்மைகளை வெளிக்கொன்று வர சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாத்திமா செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதுதொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஐஐடி வளாகத்தில் மட்டுமே மாணவர்கள் தற்கொலை நிகழ்கிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு மாற்றக்கூடாது. சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து ஏன் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது” என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், “பாத்திமா மரணம் தொடர்பான வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணை நிறைவு பெறாத நிலையில், சிபிஐக்கு மாற்ற முடியாது. மனுதாரரின் யூகங்கள், சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணையின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது” என்று தெரிவித்தனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.