ஊரடங்கை அமல்படுத்துவது தற்காலிக தீர்வுதான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 ஐத் தொட்டுள்ளது. 414 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் தீவிர கொரோனா தொற்று கொண்ட ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் (ஏப்ரல் 16) செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஊரடங்கு எந்த வகையிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வளிக்காது. அது ரிமோட்டில் உள்ள pause பொத்தானைப் போன்று தற்காலிகமாக நிறுத்தக்கூடியது மட்டுமே. ஊரடங்கை நீட்டித்தால், கொரோனா பரவல் மீண்டும் ஆரம்பித்துவிடும். கொரோனா விஷயத்தில் நாம் இப்போது அவசர கால சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இந்தியாவிலுள்ள அனைவரும் ஒன்றுபட்டு அதனை எதிர்த்து போராட வேண்டும். நாம் திட்டம் வகுத்து அதன்படி செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

சோதனை மட்டும்தான் கொரோனாவை எதிர்க்கும் மிகப்பெரிய ஆயுதம் என்றும், கடந்த 71 நாட்களில் நாம் 10 லட்சத்திற்கு, 199 பேர் என்ற விகிதத்தில்தான் சோதனை செய்துள்ளதாகவும், ஒரு மாவட்டத்திற்கு சராசரி 350 பேருக்கு மட்டுமே சோதனை நடந்துள்ளது எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, “கொரோனாவை எதிர்த்து போராட விரும்பினால் சோதனையை அதிகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் பல கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், சண்டை போடுவதற்கு இது நேரமில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் அழிக்கக் கூடாது என்று தெரிவித்தவர், “நாட்டில் உணவு பற்றாக்குறை நீடித்து வருகிறது. ஆகவே, ஏழைகளுக்கு உணவு கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அரசிடம் இருப்பில் உள்ள பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க இரக்க குணத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.