சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்களை இணையதளங்களில் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்பவர்கள் மீது போக்சோ மற்றும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர். அதன் தொடர்ச்சியாக விறுவிறுவென விசாரணையில் இறங்கிய போலீசார், முகநூலில் போலி கணக்குகள் துவங்கி குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக திருச்சியைச் சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவனை முதற்கட்டமாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு அதிரடியாக ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது மற்றும் பதிவேற்றம் செய்தவர்களின் பல IP முகவரிகளை அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு ,கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக அடுத்த பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சியில் மட்டும் எடுக்கப்பட்ட 60 பேர் கொண்ட பட்டியலில் முதல் ஆளாகத்தான் கிரிஸ்டோபர் அல்போன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றவர்கள் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களும் விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.