மே 3ஆம் தேதி வரை விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை வரும் மே 3ஆம் தேதி 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது. இதுபோலவே ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ், சுபர்பான், கொல்கத்தா மெட்ரோ ரயில் என அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வரும் மே 3ஆம் தேதி வரை 2,400 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.