சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்து வருகிறார். ஆனால், அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறுவதில்லை. இதனால், விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை திமுக நாடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களை திமுக முன்வைத்து, அதுகுறித்து நீதிமன்றத்தை நாடியுள்ளது. இப்போது வேலுமணி மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். “அதிமுக அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ‘ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்’ பயன்படுத்தியதில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் என்று வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “மழைநீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ஹார்லிஸ் ரோடு நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆற்று மணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன” என்று குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஸ்டாலின்,“அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன” என்று கூறியுள்ளார். மேலும், “உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள, ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் என்ற 1,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்கு துணை போகும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.