வீடியோ கேம் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த முகேஷ், அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில் தனது நண்பர் விஜய்யின் வீட்டுக்கு (நவம்பர் 5) சென்ற முகேஷ் அவருடன் இணைந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார். விஜய்யின் சகோதரரான உதயா வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து திடீரென துப்பாக்கி சுடப்படும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில், முகேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர்கள், அங்கு வருவதற்குள் வீட்டிலிருந்த விஜய் வெளியே ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து முகேஷை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகிலுள்ள தாகூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு முகேஷை அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து உதயாவை கைது செய்த தாழம்பூர் காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான பிரச்சினையில் முகேஷ் சுடப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. தலைமறைவான விஜய்யை கைதுசெய்து விசாரிக்கும்போதுதான் முகேஷை சுட்டது யார், எதற்காக சுடப்பட்டார், அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி கிடைத்தது போன்ற முழு உண்மையும் தெரியவரும். கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் கூட துப்பாக்கிகள் சாதாரணமாக புழங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.