திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் (செப்டம்பர் 8) நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்கு சென்றிருப்பது நல்ல விஷயமாகும். மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவுமே அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று ஏற்கனவே பொருளாளர் அறிவித்துள்ளார். அதன்படி அதிமுகவுடன் தேமுதிகவின் கூட்டணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அன்று தொண்டர்கள் அனைவரும் தலைவரை உற்சாகத்துடன் பார்ப்பீர்கள். கட்சியில் நான் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. தொண்டர்களை சந்திக்க விஜயகாந்தின் மகனாகவே வந்துள்ளேன். தொண்டர்களை சந்திக்கும் என்னுடைய பணி தொடரும்” என்ற தகவலையும் விஜய பிரபாகரன் தெரிவித்தார். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா (விஜயகாந்த் பிறந்தநாள், தேமுதிகவின் தொடக்க நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா) நடைபெறுகிறது. உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், நீண்ட தூரம் பயணித்து திருப்பூர் மாநாட்டுக்கு வருவாரா என்று தேமுதிக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜயகாந்த் கலந்துகொள்ளும் தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார் விஜய பிரபாகரன். இதனைக் கேட்டு தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.