வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் அசுரன். வடசென்னை படத்தின் வெற்றிக்குப் பின், தனுஷுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் வெற்றி மாறன். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மஞ்சு வாரியர். விசாரணை படத்திற்குப் பின் வெற்றி மாறன் நாவலை தழுவி எடுக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், (செப்டம்பர் 8)மாலை அசுரன் படத்தின் முன்னோட்டம் வெளியாகியது. அடர்த்தியும், அழுத்தமுமாக வந்திருக்கிறது அசுரனின் முன்னோட்டம். ‘நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்திருக்கிருவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிருவானுக, படிப்ப மட்டும் நம்ம கிட்டயிருந்து எடுத்துக்கவே முடியாது’ என தனுஷ் பேசும் வசனம் நெடுங்கால அரசியலையும், படத்தின் மையத்தையும் பேசுவதாக அமைந்திருக்கிறது. தனுஷ் இளைஞனாகவும், வயதான கதாபாத்திரமாகவும் தோன்றி இருக்கிறார். பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். வெற்றி மாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் இசை. அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் வெளியாகவிருக்கிறது.