ஜெயலலிதா வாழ்க்கை குறித்த திரைப்படங்கள் தொடர்பாக இயக்குநர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, ‘தலைவி’ என்னும் பெயரில் எடுக்க இயக்குநர் ஏ.எல்.விஜய் திட்டமிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் அதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதுபோல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நித்யா மேனன் நடிப்பில் ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் திரைப்படம் தயாராகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படங்களுக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மனுத் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்குத் தெரியும் என்றும் தனது கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்பிருப்பதால் திரைப்படத்தை, வெப் சீரிஸை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெயலலிதா கண்ணியத்திற்குப் பாதிப்பில்லாமல் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு (நவம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் உள்ளதையே வாதங்களாக முன்வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 14ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.