காவல் ஆய்வாளரே சாராயம் கடத்திய சம்பவம் கடலூரில் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டக் காவல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் சுந்தரேசன் புதுச்சேரியிலிருந்து மதுபான பாட்டில்களும், சாராயமும் கடத்திவந்துள்ளார். காரை கடலூர் போலீஸார் மடக்கியபோது காரிலிருந்த ஆய்வாளர் வெளியேறி தலைமறைவாகிவிட்டார். உடன் வந்த பெண் மட்டும் சிக்கியுள்ளார். இந்தத் தகவல் தெரிந்த மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அபினவ் ஐபிஎஸ், சம்பந்தப்பட்ட ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். சுந்தரேசன் 1987ஆம் ஆண்டு நேரடியாகக் காவல் துறை உதவி ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டவர். இவரது பேட்ஜ்மெட் பலரும் ஏடிஎஸ்பி, எஸ்பிகளாகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்கள். பணியில் சுத்தமில்லாத காரணத்தினால் சுந்தரேசன் மட்டும் இன்றுவரையில் ஆய்வாளராகவே இருந்துவருகிறார் என்கிறார்கள் உடன்பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள். விழுப்புரம் மாவட்டத்தில் பணிசெய்தபோது பல இடங்களில் காவல் துறைப் பணிக்கு எதிராக நடந்ததால் இவரை கடலூர் மாவட்டத்துக்கு மாற்றினார் விழுப்புரம் சரக ஐஜி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி செய்தபோது, பணியிலிருக்கும்போது போதையில் இருப்பதும், சமூக விரோதிகளுடன் சுற்றுவதுமாக இருந்ததால் அப்போதிருந்த எஸ்பி சரவணன் கடலூர் கன்ட்ரோல் ரூமுக்கு மாற்றினார். கன்ட்ரோல் ரூமில் பணிசெய்த சுந்தரேசனைச் சுழற்சிமுறையில் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணிக்கு டூட்டி போடப்பட்டும் போகாமல் அதிகாரி ஆணையை மறுத்துள்ளார். சுந்தரேசன் விழுப்புரம் மாவட்டத்தில் பணியிலிருந்தபோது, சங்கராபுரம் சூலங்குறிச்சிப் பகுதியில் கணவனை இழந்து சாராயத்தொழிலில் ஈடுபட்டுவந்த சமுத்திரக்கனியுடன் நட்பு ஏற்பட்டு சாராயத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வந்தார். சுந்தரேசன் சிதம்பரம் பகுதிக்குப் பணியிட மாறுதலில் வந்ததால், சமுத்திரக்கனியைச் சீர்காழியில் குடியமர்த்தி சாராயக்கடையை உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் சக அதிகாரிகள். புதுச்சேரியிலிருந்து சாராயம், பிராந்தி பாட்டில்களைக் கடத்திவந்து கொடுக்கவும் உதவியாக இருந்துள்ளார் காவல் துறை ஆய்வாளர் சுந்தரேசன்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10), மாலையில் பிரைவேட் பொலிரோ காரில் சமுத்திரக்கனியை அழைத்துக்கொண்டு கடலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சாவடி வழியாகப் புதுச்சேரி பார்டர் சோரியாங்குப்பம் ஒயின் ஷாப்பில் 146 மது பாட்டில்கள், ஹோல்சேல் சாராயக் கடையில் 30 லிட்டர் சாராயமும் வாங்கிக் கடத்திக்கொண்டு திரும்பியபோது, சாவடி செக் போஸ்ட்டிலிருந்த போலீஸார் காரை நிறுத்தினார்கள். காரை ஓட்டிவந்த ஆய்வாளர் சுந்தரேசன், ‘நான் இன்ஸ்பெக்டர்’ என்று சொல்ல, பணியிலிருந்த போலீஸார், ‘இது எஸ்பி ஆபீஸ் தகவல் சார்’ என்று சொன்னதும், சரி என்று காரைவிட்டு இறங்கிப் போய்விட்டார். மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், மதுபான பாட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்ததுடன் சமுத்திரக்கனியையும் அழைத்துப்போய் சிறைக்கு அனுப்பினார்கள். தலைமறைவாகியுள்ள காவல் துறை ஆய்வாளர் சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்வதற்கு ஆயுத்தமாகி வருகிறார் எஸ்பி அபினவ் ஐபிஎஸ்.