அரசியல் பலமாற்றங்களையும், திருப்பங்களையும் உள்ளடக்கியது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பல மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் கைகோர்த்தன. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அன்று காங்கிரசை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த ஒருங்கிணைந்த கட்சிகள், இன்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு ஒன்று சேர்கின்றன. அதற்கு ஒரு முன் முயற்சியாகத்தான் கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி அரசு பதவி ஏற்பு விழாவை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன.
1977ம் ஆண்டு நாடாளுமன் றத்துக்கு பொதுத் தேர்தல் வந்தது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதற்கு ஜனதா கட்சி என்று பெயரும் சூட்டப்பட்டது. இந்திராவை வீழ்த்த ஜனதா கட்சியோடு தி.மு.க., ஜனசங்கம், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் கூட்டணி வைத்தன. 1977ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. இந்திரா காந்தியே தாம் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
கடைசியில் மொராஜ் தேசாய் தலைமையில் மத்திய அரசு நிறுவப்பட்டது. 1989ம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்த பல்வேறு கட்சிகள் ஒன்று திரண்டன. இதற்கான முன் முயற்சியை அப்போதைய தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான நந்தமுரி தாரக ராமாராவ் எடுத்தார். அவரது முயற்சிக்கு வி.பி.சிங், தேவிலால், அருண் நேரு, ஆரிப் முகமதுகான், அசாம் கனபரிசத் தலைவர் பிரபல குமார் மெகந்தா, தி.மு.க. தலைவர் கலைஞர், ராமகிருஷ்ண ஹெக்டே, இடது சாரிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தனர். இதற்கு தேசிய முன்னணி என்று பெயர் சூட்டினர். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு வி.பி.சிங் தலைமையில் மத்தியில் அரசு அமைக்கப்பட்டது.
இப்போது காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆளுனர்களை வைத்துக்கொண்டு ளஎதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் மாநில அரசுகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. மேலும் மோடியின் எதேச்சதிகாரத்தாலும் சங்க பரிவாரங்களின் அரசியல் ஆட்டத்தாலும் ஒட்டுமொத்த இந்திய தேசமே நிலைகுலைந்துபோய் உள்ளது. மாட்டு இறைச்சி தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் சங்க பரவாரங்களின் செயல்பாடுகள் எதிர்கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.
பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இதன் காரணமாகத்தான் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் அமைக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கான தொடக்கக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி போன்றோர் ஆதரவாக உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் இந்த கட்சிகள் காங்கிரஸ் பக்கம் சாயக்கூடும். ஏனென்றால் மீண்டும் ஒருமுறை மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த இவர்கள் விரும்பவில்லை. எனவே இந்த எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் காங்கிரசுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. இதுவும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் இந்த முயற்சி பா.ஜ.க.வை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே தமது கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் பா.ஜ.க.வை கழற்றிவிட்டன. இப்படிப்பட்ட நிலையில் கூட்டணிக்கு ஆள்தேடி அலையும் திண்டாட்டத்தில் பா.ஜ.க. உள்ளது. எதுஎப்படி இருந்தாலும் இனி வரும் காலங்கள் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், பா.ஜ.க. என்ற கட்சிக்கும் பெரும் சிக்கலாகவே அமையப்போகிறது.

அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 4 மக்களவை தொகுதிகளில் 3ல் பாஜக தோல்வி அடைந்துள்ளது. 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இது பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.