மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தழுவலான ‘குயின்’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் உருவாவதாக அறிவிக்கப்பட்டன. ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கணா ரனாவத் நடிப்பில் தலைவி, பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யாமேனன் நடிப்பில் தி அயர்ன் லேடி ஆகிய படங்கள் ஜெ. பயோபிக்காக ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் கௌதம் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து இயக்க, ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கவிருக்கும் குயின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. மைக் முன் பெருந்திரளான கூட்டத்தின் முன் உரையாற்றும் ஜெயலலிதாவின் ஆரம்பக்கட்ட காலங்களை நியாபகப்படுத்தும் இந்த போஸ்டர் ரசிக்க வைக்கிறது.

திரைப்படமாக அல்லாமல் வெப்சீரிஸாக உருவாகவுள்ளது குயின். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த வெப்சீரிஸ் தயாராகவுள்ளது. ஜெயலலிதா கதையை பின்னணியாகக் கொண்டு புனைவாக இந்த வெப் சீரிஸை உருவாக்கவுள்ளனர். 10 எபிசோடுகளுடன் தயாராகும் இந்த வெப்சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ‘சக்தி’ என்ற பெயரில் தோன்றவுள்ளார். என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். இந்தப் பகுதிகளை கிடாரி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கவுள்ளார். ஜெயலலிதாவின் முப்பது வயதிற்கு பிறகான தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் தோன்றவுள்ளார். இந்தப் பகுதிகளை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சமீப வருடங்களில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் ரசிகர்களின் விருப்பமாக அமைந்தது. தவிர, ரம்யா கிருஷ்ணனின் குரலும், ஆளுமையும் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு இயல்பாக மெருகேற்றும் எனலாம். ஜெயலிலாதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நீண்ட வருடங்களாக ரம்யா கிருஷ்ணன் பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலியில் ராஜமாதா சிவகாமியாக அனைவரையும் பிரமிக்க வைத்த ரம்யா கிருஷ்ணன், இனி ‘குயின்’ஆக நம்மை ஈர்க்கப்போகிறார் என இப்போதே ரசிகர்கள் இந்த வெப்சீரிஸை எதிர்ப்பார்க்கத் துவங்கி விட்டனர்.