மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்தித்தது. அப்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செங்கோட்டையன்.
அதனைத் தொடர்ந்து 1980 & 84 & 89 & 1991 & 2006 & 2011 & 2016 என்று தொடர்ந்து கோபியில் நின்று வெற்றி பெற்றார். இதில் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். 1989ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். அப்போது அரண்போல் நின்று ஜெயலலிதாவை காப்பாற்றினார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா தேர்தல் பரப்புரைக்காக சுற்றுப்பயணம் செய்யும்போது, அதற்கான வழித்தடம் அமைத்துக் கொடுத்தவர் செங்கோட்டையன்.
2016ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் பள்ளிக் கல்வித்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டிச்சூழல் உருவாவதை தடுக்கும் நோக்கிலும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.ரேங்க் பட்டியல் முறை இருந்தபோது பொதுத் தேர்வு முடிவு வெளியிடும் நாளன்று ரேங்க் பெறும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். சாதாரண மாணவர்களுக்கு இனிப்பூட்டி வாழ்த்து சொல்வது, ஊடகங்களுக்கு பேட்டி என பள்ளி வளாகம் அமர்க்களமாக இருக்கும். இந்த ஆரவாரங்களுக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கும் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தமிழக அமைச்சர்கள் சிலர் பேட்டி, பேச்சு என்று பலதருணங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் தமது துறை ரீதியிலான பேட்டி தவிர வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் சிக்கிக்கொள்வதில்லை. இத்தனைக்கும் இவர் ஒரு மூத்த அமைச்சர். அதுவுமின்றி எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் மூத்தவர்.
தமது துறையில் சத்தம் இல்லாமல் சாதனை நிகழ்த்தி வருபவர் செங்கோட் டையன். தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அளவில் தளர்ந்துவிடாமல் இருக்க, மாவட்டம் தோறும் கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, ஆசிரியர் &மாணவர்& பெற்றோருடன் இணைந்து கிராமங்கள் தோறும் ஊர்வலம், முரசு கொட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க ஆணையிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) முறையிலும் ஆசிரியர் பணி மாறுதலிலும் எந்த முறைகேட்டிற்கும் இடமளிக்காமல் செயல்பட்டுள்ளார். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. சிறுபான்மை மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தேஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர் செங்கோட்டையன். தம்மை ஆளாக்கிய இருவரது பெயரையும் காப்பாற்றி வருகிறார் செங்கோட்டையன்.

கல்வித்துறைக்கு கோட்டைக் கட்டும் செங்கோட்டையன்…