இடைத் தேர்தலில் அல்வா கொடுத்து அதிமுக வெற்றிபெற்றதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷின் மகன் மனோஜ்- அஸ்வினி ஆகியோரின் திருமணம் சென்னை வானகரத்தில் (நவம்பர் 1) நடைபெற்றது. நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக முதன் முதலில் பேசியபோது, ‘எதிரிக்கட்சியாக இருக்கமாட்டோம். எதிர்க்கட்சியாக இருந்து நாங்கள் செயல்படுவோம்’ என்று கூறினேன். அதைத்தான் தற்போதும் செய்துகொண்டிருக்கிறேன். இது எடப்பாடி ஆட்சியல்ல – எடுபிடி ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீட், ஹைட்ரோ கார்பன் என எத்தனையோ பிரச்சினைகளை காரணமாக சொல்ல முடியும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்குதான் இதுவரையில் பொதுத்தேர்வு இருந்தது.மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தைக் கொண்டுவந்து 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பிற்கும், பொதுத் தேர்வு நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. அதை நிறைவேற்றிட வேண்டும் என்று எந்த ஆணையும் வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே எடப்பாடி அரசு 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகள் கல்வியில் முன்னேறி விடக்கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, இதுபோன்ற திட்டங்களை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

இதனை புரிந்துகொண்டு வரவுள்ள தேர்தல் உள்ளாட்சி, பொதுத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அதில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், “இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி ஜனநாயகத்தை நம்பாமல் பணநாயகத்தை நம்பியிருக்கலாம். பண நாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இது தொடராது. பொதுத் தேர்தலைப் பொறுத்த வரையில், ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு மிட்டாய் கொடுப்பது போல பொய் வாக்குறுதிகளை சொல்லி திமுக வெற்றிபெற்றுவிட்டதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர். ஆனால், நடந்துமுடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. இதுதொடர்பாக திருமண நிகழ்வில் பேசிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பொறுத்துகொள்ள முடியாத நிலையில், இடைத்தேர்தலில் பொய் சொல்லி ஓட்டுகளைப் பெற்றார்கள். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை காட்டுவதுபோல், மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்றார்கள்” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டது என்று கூறியவர்களை இப்போது நான் கேட்கிறேன். இப்போது இரண்டு இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்? அல்வா கொடுத்தீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பொய் சொல்லி இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அல்ல உண்மை. பணம் கொடுத்து பணநாயகத்தின் மூலமாக இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அது தொடர்ந்து நீடிக்க வாய்ப்பே கிடையாது” என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.